உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் கீவ் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் புதிய ரக வான்வழித் தாக்குதல் உத்திகளால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இடைவிடாது நடத்தப்படும் தாக்குதல்கள் உக்ரைன் மக்களின் தூக்கத்தைப் பறித்து, அவர்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்படும் நேரத்திற்கும், ஏவுகணைகள் வந்து தாக்கும் நேரத்திற்கும் இடையே வெறும் 4 நிமிடங்களே இடைவெளி இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லக் கூட போதிய அவகாசம் கிடைப்பதில்லை. ‘நாங்கள் தூங்கத் தொடங்குவதற்குள் அடுத்த ஆபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இரவு முழுவதும் இந்நிலை நீடிப்பதால், மக்கள் தூக்கமின்றி நடைபிணங்களைப் போல (ஜாம்பிகள்) நடமாடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்’ என கீவ் நகர மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவின் இந்தத் தொடர் இரவுநேர தாக்குதல்கள் உக்ரைனின் உட்கட்டமைப்புகளைச் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களின் மனநலனையும் கடுமையாகப் பாதித்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.