‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடி, தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75) இன்று (அக்டோபர் 22) காலை காலமானார்.
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலால் முத்திரை பதித்த கிருஷ்ணராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அருணாச்சலம்’, அஜித் குமாரின் ‘காதல் கோட்டை’ மற்றும் ‘பருத்திவீரன்’ உட்பட பல வெற்றிப் படங்களில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கலக்கியுள்ளார். கிராமிய மணமும் துள்ளல் இசையும் இணைந்த இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
வயது மூப்பு காரணமாக மரணமடைந்த பாடகர் கிருஷ்ணராஜின் மறைவுச் செய்தி கேட்டு, தமிழ் திரையுலக பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான இசை ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு தமிழ் இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும்.