52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
கட்டுமானப் பணியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை இலவச சிகிச்சை: டெல்லி அரசு அறிவிப்பு

நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அதில் காப்பீட்டுத் திட்டங்கள் மிக முக்கியமானவை. நாடு முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக ஆயுஷ்மான் பாரத் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில், மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களில் சிறப்பு காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. அந்த வகையில் டெல்லியில் மிக முக்கியமான காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பதிவுசெய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களைப் பெரிய நோய்களுக்கான சிகிச்சையின் அதிகப்படியான செலவிலிருந்து பாதுகாப்பதற்காக, டெல்லி அரசின் 'டெல்லி கட்டிடக் கட்டுமானத் தொழிலாளர் சுகாதாரத் திட்டம்' (Delhi Building Construction Workers Health Scheme) தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மருத்துவமனை சிகிச்சைக்குத் தொழிலாளர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து ஒரு பைசா கூட செலவிட வேண்டியதில்லை. இத்திட்டம் முழுமையாக பணமில்லா (cashless) முறையில் செயல்படுத்தப்படுவதால், அவசர காலங்களில் தொழிலாளர்கள் உடனடி சிகிச்சையைப் பெற முடியும்.

எந்தெந்தத் தொழிலாளர்களுக்குப் பலன் கிடைக்கும்?

டெல்லியில் உள்ள 2,70,000க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இத்திட்டம் நேரடியாகப் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. தொழிலாளர்களின் வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

எவ்வளவு தொகை வரை இலவச சிகிச்சை கிடைக்கும்?

ஷ்ராமிக் ஸ்வஸ்திய யோஜனா (Shramik Swasthya Yojana) திட்டத்தின் கீழ், பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை தனிப்பட்ட பணமில்லா சிகிச்சை வழங்கப்படும். அதேசமயம், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் என்ற கூட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இலவச மருத்துவப் பரிசோதனை!

தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்கள் உடல்நலனைக் கவனிக்கத் தவறுவதால், அரசு அவர்களுக்கும் அவர்களது வாழ்க்கைத் துணைக்கும் ஒவ்வொரு ஆண்டும் இலவச மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும். இத்தகைய வழக்கமான பரிசோதனைகள் மூலம் தீவிரமான மற்றும் மறைந்திருக்கும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாகச் சிகிச்சை அளிக்க முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வெளிநோயாளி முதல் உள்நோயாளி சிகிச்சை வரை!

இத்திட்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் செய்யப்படும் சிகிச்சைக்கு மட்டுமல்லாமல், பொதுவான மருத்துவர் ஆலோசனைகளுக்கும் (OPD) பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தேவையான அனைத்து ஆய்வகப் பரிசோதனைகள், தீவிர அறுவை சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் அவசரக்கால ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய சேவைகளும் இலவசமாக வழங்கப்படும். பெரிய மருத்துவமனைக்கு மேல் பரிந்துரை (referral) தேவைப்பட்டால் அதற்கான ஆவணப் பணிகளும் கூடுதல் கட்டணமின்றி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சுகாதாரப் பதிவு!

இத்திட்டத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக பயனாளிகள் அனைவருக்கும் தனித்துவமான டிஜிட்டல் சுகாதாரப் பதிவும் அடையாள அட்டையும் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகங்கள் அல்லது அவசர உதவிக்குத் தொடர்புகொள்ள 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா உதவி எண் சேவையும் தொடங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *