திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் சமீபத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. அங்கு இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. இந்த இறால் பண்ணையில் வட மாநிலத் தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.முன்னதாக கடந்த 21 ஆம் தேதி இந்த இறால் பண்ணையில் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அமோனியா வாயு தொட்டியில் இருந்து குளிர்சாதன பிரிவுக்கு செல்லும் குழாயின் வால்வு பகுதி வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு தொழிற்சாலை முதல்தளம் முழுவதும் சில நிமிடங்களில் பரவியுள்ளது. இதன் காரணமாக பணியில் இருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள தங்குமிடங்களில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்து போலீஸார், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் இன்னமும் சந்திக்கவில்லை என பாஜக மாநில தலைவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.இது சம்பந்தமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை அவர் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, கரூரை கைகழுவி விட்டதை போன்று, பெரியபாளையத்தையும் புறக்கணிக்கிறீர்களா திரு அவர்களே என்ற கேள்வியை தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார். தொடர்ந்து அவருடைய பதிவில், திருவள்ளூர் பெரியபாளையம் தொழிற்சாலையில் அமோனியா வாயு தாக்கி உய்த்ரிழ்ண்டவர்களுடைய எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இது தமிழகத்தையே சோகக்கடலில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்திக்காத உங்கள் ஆணவமும் அலட்சியமும் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. தினந்தோறும் சினிமாக்காரர்களை சந்தித்து சிரித்து பேசி மகிழும் உங்களுக்கு, உங்கள் ஆட்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்வதற்கு நேரமில்லையா அல்லது மனமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்களுடைய ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமோ? பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விட்டெறிந்து விட்டால் நம்முடைய கடமை முடிந்து விட்டது என்று அவர்களை சந்திக்காமல் நீங்கள் ஓரம் கட்டுவது என்ன மாதிரியான மனநிலை? என அடுக்கடுக்கான கேள்விகளை தன்னுடைய பதிவில் நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ளார். தொடர்ந்து அவருடைய பதிவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கேள்விக்குறியாக மாறியுள்ள பெண்களின் பாதுகாப்பு, பெருகி வரும் போதைப் பழக்கம், தவெகவினரின் அராஜகங்கள் என உங்களுடைய ஆட்சியில் நடைபெறும் எந்த பிரச்சனைகளையும் நீங்கள் கண்டு கொள்வது இல்லை. இதற்கு (23/06/2026) ஒரே நாளில் நடந்துள்ள பத்து பாலியல் வன்கொடுமைகள் கொடூரமே சாட்சி. இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல், அடுத்த "நீரோ" மன்னன் போன்று முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள உங்களுடைய உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் துவங்கி விட்டது. இவ்வாறு தன்னுடைய பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

