52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
நான் யாருக்கும் பயந்து ஓடல, எந்தத் தவறும் செய்யல..– சென்னை திரும்பிய எ.வ.வேலு கொடுத்த விளக்கம்

திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு சிங்கப்பூரில் தனது மருத்துவப் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அரசியல் காரணங்களுக்காக ஓடுவது, ஒளிவது, பதுங்குவது போன்ற பழக்கம் எல்லாம் திமுகவிற்கு எப்போதும் கிடையாது. மறைந்த யும், எங்களது தலைவர் மு.க.ஸ்டாலினும் எங்களை அப்படி வளர்க்கவில்லை. எந்தவொரு அரசியலையும் சவால்களையும் நேருக்கு நேர் சந்திக்க திமுக என்றுமே தயங்கியது இல்லை என்று கூறினார். மேலும் தனது சிங்கப்பூர் பயணம் குறித்துப் பேசியவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, எனது உடல்நிலையை முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்தேன். கடந்த மாதம் 17ஆம் தேதியே எனக்கு விசா வழங்கப்பட்டுவிட்டது. அன்றைய தினமே, ஜூன் 25ஆம் தேதி சிங்கப்பூர் செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் டிக்கெட்டும் முன்பதிவு செய்துவிட்டேன்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஜூன் 25ஆம் தேதி காலை 7 மணிக்கு காவல்துறையினர் திடீரென என் வீட்டுக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு வந்த காவல்துறை அதிகாரியிடமே, நான் எடுத்திருக்கும் விவரத்தைக் கூறினேன். அந்தச் சோதனை காரணமாகத்தான் திட்டமிட்டபடி செல்ல முடியாமல் அடுத்த நாள் அதாவது 26ஆம் தேதி நான் சிங்கப்பூருக்குக் கிளம்பிச் சென்றேன் என்று விளக்கமளித்தார்.

தொடர்ந்து வரும் உடல்நலப் பிரச்சினைகள்:

தனது சிகிச்சை குறித்துப் பேசிய எ.வ.வேலு, "எனக்கு உடலில் சில உபாதைகள் உள்ளன. அலர்ஜி, நியூரோ (நரம்பியல்) மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் எனக்கு உண்டு. இதற்காகவே நான் சிங்கப்பூர் சென்றேன். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில்தான் இதயம் தொடர்பான சிகிச்சையை நான் முதன்முறையாக எடுத்துக்கொண்டேன். அதன் பிறகு தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 2023ஆம் ஆண்டிலும் அதே மருத்துவமனைக்குச் சென்றுதான் சிகிச்சை பெற்றேன்.உடலில் எதனால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய ஒரு தடுப்பூசி செலுத்தி, மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்து சோதனை செய்வார்கள். அதிலேயே 3 நாட்கள் முடிந்துவிட்டன. அதனைத் தொடர்ந்து, ஜூன் 29ஆம் தேதி நரம்பியல் பிரச்சினைக்காகப் பரிசோதனை செய்தேன்.

பயத்திலோ சுற்றுலாவுக்காகவோ சிங்கப்பூர் செல்லவில்லை

ஜூன் 30ஆம் தேதி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்காக மருத்துவரைச் சந்தித்தேன்.ஜூலை 3ஆம் தேதி இதய மருத்துவ நிபுணர் ஜெயராமனைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றேன். ஒன்பதாம் தேதி வரை எனக்கான மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்றன என்று தனது மருத்துவப் பயணத்தின் முழு விவரங்களையும் பட்டியலிட்டார்.தொடர்ந் து பேசியவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்னை கொறடாவாக இடத்திற்கு நியமித்திருக்கிறார். அதை இந்த அரசாங்கமும், குறிப்பாகத் சபாநாயகரும் முழுமையாக அங்கீகரித்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயமாக இருந்தாலும் சரி, அல்லது அரசு சார்ந்த கேள்விகளை எழுப்புவதாக இருந்தாலும் சரி, அதைச் செய்வதற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு முழு சுதந்திரம் உண்டு.அண்மையில் மூன்று நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூட, மக்கள் சார்ந்த அதிகப்படியான கேள்விகளை நான் தான் எழுப்பியிருப்பேன். நான் அவையில் பேசவே கூடாது என்று யாராவது நினைக்கிறார்களா என்பது போகப் போகத்தான் தெரியும் என்றார்.

நிச்சயம் விசாரணைக்கு ஆஜராவேன்

தன் மீதான வழக்குகள் குறித்துப் பேசியவர் நான் எப்போதும் நீதிக்குத் தலை வணங்குவேன். நீதிமன்றம் எனக்கு நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் சொல்கிறேன், நான் எந்தவிதமான குற்றமும் புரியவில்லை. தவறு செய்ய வேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாது.தற்போது நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கை நான் தொடுத்திருக்கிறேன். மாண்புமிகு நீதிபதி அவர்கள் எனக்கு நல்லதொரு நீதியை வழங்குவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. நன்றி, வணக்கம் என்று தனது பேட்டியை முடித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *