
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக , பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தவெக ஆதரவு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மேடையில் ஓரமாக அமர்ந்த எம்எல்ஏ
இந்த நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவைச் சேர்ந்தவருமான , அமைச்சர் விஸ்வநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்க அழைத்த போது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு, மேடையில் ஓரமாக அமர்ந்தார் என குறிப்பிடத்தக்கது.ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஸ்வநாதன்,விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் தற்போது 14 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அத்தகைய மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை என சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு கருத்து தெரிவித்திருந்தனர்.
மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை
இந்த நிலையில், கோடைக்காலம் என்பதால் மும்முனை மின்சாரம் வழங்குவதில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்த நிலையில், தடையின்றி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.மேலும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இருப்பதாகவும், இப்பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என்றார். கல்வியை பொறுத்தமட்டில் கல்லூரிகளில் தகுதியான மாணவர்களுக்கு கண்டிப்பாக இடம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மின்வாரியத்துக்கு உத்தரவு
மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விஸ்நாதன், மும்முனை மின்சாரம் என்பது தினசரி 18 மணி நேரம் வழங்க வேண்டும். ஆதனால் தற்போது 14 மணி நேரம் வழங்கப்படுவதாகவும், இத்தகைய 14 மணி நேரத்ததை சரியாக கணக்கிட்டு எந்தெந்த நேரத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பினை விவசாயிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க மின்வாரியத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், இதனை பொதுமக்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து இருப்பதாகவும், முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விவசாயத்திற்கு உரிய நீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேகதாது அணை விவகாரம்
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழக முதல்வர் நீட் தேர்வினை பொறுத்தமட்டில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அமைச்சராகிய நான் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவன். ஆனால் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒரு கல்லை கூட எடுத்து வைக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.உயர்கல்வித்துறை லஞ்சம் ஊழல் இல்லாமல் செயல்படும் என தெரிவித்த அமைச்சர் விஸ்வநாதன், திருவாரூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த மாவட்ட நிர்வாகமூம் லஞ்சம், ஊழல் இல்லாமல் செயல்படும் என தனது நம்பிக்கையை தெரிவித்தார்.
