
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பல விதமான சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா, மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணைவது என அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் விரைவில் தமிழ்நாட்டில் காலியான உள்ள தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன.குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பினை தவறவிட்ட , இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். இழந்த தங்களுடைய பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதன் காரணமாக இடைத்தேர்தல் நடக்கும் ஆறு தொகுதிகளிலும் தற்போதே கவனம் செலுத்த துவங்கியுள்ளது திமுக. இதற்காக வேட்பாளர்கள் தேர்வு செய்வது மற்றும் தேர்தல் பணிகள் உள்ளிட்டவற்றை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.இதனிடையில் இந்த இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி பெரியளவில் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகினார் பனையூர் பாபு. சமீப காலமாக திருமாவளவனின் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை.அவர் எடுக்கும் முடிவுகளில் தடுமாற்றம் இருப்பதாகவும் விமர்சனம் செய்திருந்தார். இதனால் விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து சிந்தனை செல்வன், பனையூர் பாபு தன்னுடைய முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாற்றுக்கருத்துகள் எதுவாக இருந்தாலும் அதனை திருமாவளவனுடன் பேசி தீர்த்து கொள்ளலாம் எனவும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் பனையூர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் பனையூர் பாபு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மதுராந்தகம் தொகுதியில் போட்டி போடுவதற்கு திமுகவிடம் வாய்ப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பனையூர் பாபுவுக்கு பனையூர், மதுராந்தகம் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர் பொறுப்பினை வழங்குவதற்கு திமுக தலைமை முடிவு செய்து இருந்ததாம். இப்படியான நிலையில் மதுராந்தகம் தனித்தொகுதி என்பதால், அங்கு போட்டியிடும் வாய்ப்பினை கேட்டுள்ளார் பனையூர் பாபு.இதனையடுத்து அவரை தேர்தல் பணிகளை மேற்கொள்ள சொல்லி திமுக தலைமை கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. பனையூர் பாபுவும் மதுராந்தகம் தொகுதிக்கு உள்ளாகவே வீட்டை மாற்றிக் கொண்டு தேர்தல் வேலைகளை துவங்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறாராம். இதனால் மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக சார்பாக பனையூர் பாபு வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மற்றொரு பக்கம் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், குறைந்த வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். இதனை தொடர்ந்து தற்போது அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
