அவையில் கவனம் பெற்ற சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர்
- ரீல்ஸ் போட்டு கொண்டிருந்தவர்கள் தற்போது செய்தி பார்க்க ஆரம்பித்துள்ளனர் என முதலமைச்சர் விஜய் கூறியதை போல, சட்டமன்ற நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.
- பலருக்கு அரசியல் படிப்பினையாக அமைந்துள்ளது. இந்த சூழலில் சபாநாயகர் அனைத்து தரப்பினருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடந்து கொண்ட விஷயங்கள் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளன.
- நடுநிலையாக நடந்து கொண்டார் என்ற பாராட்டை பல தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர்.
- குறிப்பாக கடந்த 19ஆம் தேதி அவையில் சில உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களை கேலி செய்வது போன்ற முக பாவனைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இதுபோன்ற செயல்பாடுகள் அவையின் மாண்பை குலைக்கும். இது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று காலை கூட்டம் தொடங்கிய போதே எச்சரித்திருந்தார்.
பிரேமலதா விமர்சனம் - சபாநாயகர் அறிவுறுத்தல்
ஆளுநர் அர்லேகர் அவர்கள் தனது உரையை வாசிக்கும் போது, தமிழை சரியாக உச்சரிக்கவில்லை. காதில் தேன் வந்து பாயவில்லை. ஈட்டியாய் பாய்ந்தது என்று தேமுதிக எம். எல். ஏ பேசிய போது சபாநாயகர் தடுத்தார். வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர். தமிழில் பேச முயற்சிப்பதை வரவேற்க வேண்டும். தலைவர்களின் பெயர்களை முழுமையாக படித்திருக்கிறார். தமிழ் கற்க விரும்பும் அவரது ஆர்வத்தை வரவேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தவறாக படித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்
இன்னும் சொல்லப் போனால் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்களையும் நெறிப்படுத்தினார். வழிகாட்டினார் என்று தான் சொல்லலாம். அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுகையில் நூற்று பதினேழு புள்ளி இருபத்தி ஐந்து என்று வாசித்தார். அதை திருத்தி நூற்று பதினேழு புள்ளி இரண்டு ஐந்து என வாசிக்குமாறு அறிவுறுத்தினார். அதனை ஏற்று அமைச்சரும் திருத்தி கொண்டார்.
தேசிய கீதம் பாடியதில் என்ன தவறு? உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி
மற்ற உறுப்பினர்கள் குறுக்கிட்ட போது, எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு தான் நேரம் ஒதுக்க வேண்டும். அவரது பேச்சின் போது யாரையும் குறுக்கிட அனுமதிக்க மாட்டேன் என்று மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினார். அதேசமயம் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதில் உறுதியாக இருந்தோம். தேசிய கீதம் 2 முறை பாடியதில் என்ன தவறு. அதை எப்படி தவறு என சொல்ல வருகிறீர்கள். எந்த அடிப்படையில் தவறு என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதையும் பார்க்க முடிந்தது. அவை சீரியசாக சென்று கொண்டிருந்த போது, அனைத்து எம். எல். ஏக்களுக்கும் தனித்தனியே வாட்டர் பாட்டில் வைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார். அதற்கு ஓபிஎஸ் கவுண்ட்டர் கொடுக்க சபாநாயகர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் சிரிப்பலையிலும் மூழ்கினர்.
அமைச்சர் நிர்மல் குமார் பேசிய வார்த்தைகள் நீக்கம்
மின்சாரத் துறையில் கடந்த ஆட்சியில் நடந்த குளறுபடிகள் என செந்தில் பாலாஜிக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் , 90 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதாக சொல்லியிருக்கிறார். அதில் 44 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிலிருந்து அவர்களது லட்சணம் தெரிகிறது. 3 ஆண்டுகளில் என்னென்ன செய்தீர்கள் என்பதற்கு வழக்குகள் இருப்பதாக தெரிவித்தார். உடனே லட்சணம் மற்றும் வழக்கு ஆகிய வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
சென்னை மேயர் பிரியா குத்துவிளக்கு விவகாரம்
மேலும் திரு. வி. க நகரில் பள்ளி ஒன்றில் சென்னை மேயர் பிரியா, தவெக எம். எல். ஏ பல்லவி ஆகியோருக்கு இடையில் குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பான சர்ச்சை எழுந்தது தொடர்பாக சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த விஷயத்தில் மேயர் பிரியாவிற்கு எதிராக நடவடிக்கை பாயுமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தவித நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு - அவையில் மரபு மீறலா?
இவ்வளவு தூரம் நடுநிலையாகவும், அனைத்து தரப்பையும் அரவணைத்தும் அவையை முன்னெடுத்து சென்ற சபாநாயகர், கடைசியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.ஆளுநர் உரை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர் தொடங்கி வைப்பார். இறுதியில் எதிர்க்கட்சி தலைவர் முடித்து வைப்பார். பின்னர் முதலமைச்சர் தான் அனைத்து துறை சார்ந்த குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பார். இந்த சூழலில் முதலமைச்சர் பதிலுரைக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் எப்படி பதிலளிக்க முடியும். இந்த விஷயத்தில் அவையின் மரபுகளும், விதிகளும் மீறப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

