தவெக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய எதிர்க்கட்சி
அந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். முந்தைய ஆட்சிகளில் நடந்த ஊழல்கள், ஓட்டைகள் குறித்தும் தவெக அமைச்சர்கள் புட்டு புட்டு வைத்த காட்சியும் அரங்கேறியது. நேற்றைய தினம் நடைபெற்ற சட்டசபையில் விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி, அனைத்திற்கும் முதலமைச்சர் விஜய் பதில் உரை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
ஷூட்டிங்கில் இருந்து நேராக சிஎம் விமர்சனம் - பதிலடி
இந்நிலையில், சட்டசபை நிறைவு நாளான இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். அப்போது, ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனார் என்று எதிர்க்கட்சியினர் வைத்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். அதில் 1990 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நடந்த பல விஷயங்களை குறிப்பிட்டு பேசி இருந்தார்.
உயர்வுக்கு காரணம் மக்கள் மட்டுமே
ஒரு சாதாரண நடிகனாக தான் நம்ம கெரியர் தொடங்கியது. அப்புறம் அப்படியே சின்சியரா உழைத்து மேலே வந்தோம். நம்ம கெரியரில் மேலே வந்ததுக்கு இந்த விஜய் ஒருத்தன் மட்டுமே காரணம் இல்லை. அவனோட உழைப்பு மட்டுமே காரணம் இல்லை. இந்த விஜய்யோட உழைப்புக்கும் உயர்வுக்கும் பின்னாடி இருக்கின்ற ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களோட அன்பும் அரவணைப்பும் தான் காரணம்.
மக்களோடு மக்களாக நின்ற தருணம்
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க ஒவ்வொருத்தரும் நம்மளை அவங்க வீட்டில் ஒருத்தனாக ஏத்துக்கிட்டதுதான் நமக்கு கடவுளும் மக்களும் தந்த மிகப்பெரிய வரம். இப்படி நம்மள தாய் அன்போடு அள்ளி அரவணைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு நாம எப்படி எல்லாம் துணையாக நின்றோம், எப்படி எல்லாம் மக்களோடு மக்களாக இருந்தோம் என்று சொல்கிறேன்.
1990 முதல் 2024 வரை நடந்தது என்ன?
- 1990களில் ரசிகர் மன்றமாக இருந்தபோதே மக்களுக்கு துணையாக நிற்க ஆரம்பித்துவிட்டோம். அதன் பிறகு, நற்பணி மன்றமாகவும், அதுக்கப்புறம் விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்றுக் கொண்டிருந்தோம்.
- 2008இல் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். போர் முடிவுக்கு வர வேண்டும், நம்ம தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பான, நிம்மதியான ஒரு வாழ்வு கிடைக்க வேண்டும் என்று அன்றைக்கே கோரிக்கை வைத்தோம்.
- 2009இல் ஆரம்பிக்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கம் வழியாக நம்மளுடைய மக்கள் நலப் பணிகளை எக்ஸ்டென்ட் அண்ட் எக்ஸ்பாண்ட் (Extend and Expand) செய்துக் கொண்டே வந்தோம்.
- கல்விக்குத் துணையாக நின்றோம், சோசியல் சர்வீஸ் செய்தோம், வெள்ள நிவாரணத்தில் துணையாக இருந்தோம், கொரோனா காலத்தில் மக்களுக்குத் தோள் கொடுத்தோம். விலையில்லா விருந்தகம், விழியகம், பயிலகம், நூலகம், குருதியகம், முட்டை-பால்-ரொட்டி திட்டம் இப்படிப் பல வழிகளில் மக்களுக்குத் துணையாக இருந்தோம்.
- அதன் பிறகு, நம்மளோட திரைப்படங்களில் நம்மால் முடிந்த வரைக்கும் ஊழல் எதிர்ப்பைச் சொன்னோம், சமூக நீதியைச் சொன்னோம், கல்வியைப் பற்றி கூறினோம், அரசியலைப் பற்றி பேசினோம். அரசியலைப் பற்றி பேசியதால் நம்ம படங்கள் சந்தித்த, ஏன் இதுவரைக்கும் சந்திக்கிற பிரச்சனையைப் பற்றி அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.
- இதுமட்டுமில்லாமல், 2011இல் நாகப்பட்டினத்தில் மீனவர் பிரச்சனைகளுக்கு ஆதரவாக ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடத்தினோம். மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசி, அதில் நம்மளுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தோம்.
- 2017இல் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழர் பண்பாட்டு உரிமைக்கான நம்மளோட ஆதரவைத் தெரிவித்தோம்.
- 2018இல் ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நம்ம சொந்தங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.
- 2021இல் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்கள். கல்வி விருது விழா நடத்திச் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் பரிசும் வழங்கினோம்.
- 2024இல் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினோம். தொடங்கிய உடனேயே சி. ஏ. ஏ-வை எதிர்த்து அறிக்கை வெளியிட்டோம்.
- அரசியல் கட்சி ஆரம்பித்து விழுப்புரம் மாவட்டத்தில் விக்ரவாண்டியில் முதல் மாநில மாநாட்டைக் கொள்கைத் திருவிழாவாக நடத்தினோம்.
- தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் என ஐந்து கொள்கைத் தலைவர்களை அறிவித்தோம்.
- இந்தியாவிலேயே இரண்டு பெண் ஆளுமைகளைக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி நம்ம டி. வி. கே (TVK) மட்டும் தான் என்ற பெருமையோடு அறிவிக்கப்பட்டது.
இவ்வளவு விஷயங்களை செய்த பிறகே ஒவ்வொரு வீட்டிலும் இதயத்தில் இடம் பிடித்து முதலமைச்சர் ஆனேன் என்று அனைத்து விமர்சனத்திற்கும் பலே பதிலடி கொடுத்தார்.

