எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள்
இந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலமாக அனைத்து முக்கிய நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், தான் நிர்வாக வசதிக்காக 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.
- அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC)
- சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC)
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - சேலம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - விழுப்புரம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - கும்பகோணம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - மதுரை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - கோயம்புத்தூர்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - திருநெல்வேலி
தலைவர்கள் பெயரில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள்
1990 ஆம் ஆண்டு மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 'திருவள்ளூர் போக்குவரத்து கழகம்' என்று பெயரிடப்பட்டது. பின்னாளில் ஜெ. ஜெ. போக்குவரத்து கழகம், ராஜீவ் காந்தி போக்குவரத்து கழகம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டன. அதேபோல், சென்னையில் மட்டும் இயங்கிய மாநகர பேருந்துகள் 'பல்லவன் போக்குவரத்து கழகம்' என்றும், பிற மாவட்டங்களில் இயங்கிய பேருந்துகள் 'சேரன், சோழன், பாண்டியன் கழகம்' என்றும் பெயரிடப்பட்டது.
அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே பெயர்
பின்னாளில் அதுவே தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, ஜீவா, தீரன் சின்னமலை, மருது பாண்டியர், வீரன் அழகுமுத்துக்கோன் என சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர்களில் இயக்கப்பட்டு வந்தன. இப்படி மாறி மாறி பேருந்துகளுக்கு வைக்கப்படும் பெயர்களால் சர்ச்சையாக வெடித்தது.இதையடுத்து, தமிழ்நாடு அரசு அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே மாதிரியான பெயரை வைக்க முடிவு செய்தது. அதன்படி, மாநிலத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்' என்றும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு 'தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம்' என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு என்ற வார்த்தையை நீக்கிய சம்பவம்
இந்த நிலையில் தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் போது 'தமிழ்நாடு' என்ற வார்த்தை அனைத்து அரசுப் பேருந்துகளின் முகப்பு கண்ணாடி, பக்கவாட்டுப் பகுதிகள் மற்றும் பின்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களில் இருந்தும் தமிழ்நாடு என்ற வார்த்தை நீக்கப்பட்டது. இதுவே தான் திமுக ஆட்சியின் போதும் தொடர்ந்து இருந்தது.பேருந்துகளின் முன்பக்கத்தில் பெயர் நீளமாக இருப்பதை தவிர்க்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டது என்ற சில்லி காரணம் சொல்லப்பட்டது. தமிழ்நாடு என்று எழுதினால் போக்குவரத்துத்துறைக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுவிடுமா? இதுதான் தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா? என்று பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும், அனைத்து பேருந்துகளிலும் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாமலேயே இயக்கப்பட்டு வந்தன.
மீண்டும் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு
இப்படியான சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசின் உத்தரவின்படி, அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் நீக்கப்பட்டு இருந்த 'தமிழ்நாடு' என்ற வார்த்தை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் தவிர, பிற ஆறு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சிஎன்ஜி பேருந்துகளிலும் முகப்பு கண்ணாடி, பக்கவாட்டுப் பகுதிகள் மற்றும் பின்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து பேருந்துகளிலும் தமிழ்நாடு
இருப்பினும், பிற அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வார்த்தை சேர்ப்பது குறித்து இன்னும் உத்தரவு வரவில்லை என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக இருந்து வரும் தமிழ்நாடு என்ற வார்த்தையை மீண்டும் சேர்த்தது குறித்து பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளிலும் தமிழ்நாடு என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும். அப்போது தான் வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது தமிழ்நாட்டு பேருந்துகள் தனி அடையாளமாக திகழும் என்பதே நெட்டிஷன்கள் மற்றும் தமிழ் மக்களின் விருப்பமாக இருக்கிறது.

