43,000-க்கும் அதிகமான மையங்கள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த போலியோ சொட்டு மருந்து தங்குதடையின்றி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 52.91 லட்சம் 0 - 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கான முக்கியக் குறிப்பு
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, தங்களின் குழந்தைகளுக்கு ஏற்கனவே வழக்கமான போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், இந்த முகாம் நாளில் தங்களின் குழந்தைகளுக்கு மீண்டும் ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்குவது அவசியமாகும்.
பேருந்து, இரயில் நிலையங்களிலும் தற்காலிக மையங்கள்
பொதுமக்கள் தங்களின் பயணங்களின் போதும் எளிதாகச் சொட்டு மருந்து செலுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
- முக்கியப் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள்சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
- முகாம் நாளான 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்துப் பொது மையங்களும் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
- அதனைத் தொடர்ந்து, ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆகிய அடுத்த இரண்டு நாட்களுக்குத் தற்காலிக மையங்களில் (Transit Booths) மட்டும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
மலைவாழ் மக்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை
- மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடுபடக்கூடிய விளிம்புநிலை மக்களுக்கும் இந்த சேவை முழுமையாகச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது
- தொலைதூரப் பகுதிகள், வாகனங்கள் எளிதில் செல்ல இயலாத கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கச் சிறப்பு நடமாடும் மருத்துவக் குழுக்கள்(Mobile Medical Teams) அமைக்கப்பட்டுள்ளன.
- பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குப் பிழைப்பிற்காக வந்து வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் (Migrant Labourers) குழந்தைகளுக்கும் இந்த முகாம்களில் முன்னுரிமை அளித்துச் சொட்டு மருந்து வழங்கப்படும்.
2 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் களம் இறக்கம்
இந்த மாபெரும் மருத்துவப் பணியைச் செம்மையாக நடத்தத் தமிழக அரசு மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் (Volunteers) இணைந்து களப்பணியாற்ற உள்ளனர். எனவே, பெற்றோர்கள் அனைவரும் தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்தினை இட்டுக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.

