இராமநாதபுரம் பசும்பொன் நகர் பகுதியில் 5 வயது சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் காணாமல் போன சிறுமியை தேடி வந்த நிலையில், நேற்று (ஜூ 29, 2026) பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், சிறுமியை யாரேனும் கொன்று தூக்கி வீசினார்களா? அல்லது தற்செயலாக தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில், உறவுமுறை பெண் ஒருவர், சிறுமியை கடத்தி கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை மர்மமான முறையில் கடத்தி கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது? குறித்து விரிவாக பார்ப்போம்.மதுரையை சேர்ந்தவர் பாலகணேஷ். இவருடைய மனைவி கார்த்திகைச்செல்வி (28). இந்த தம்பதிக்கு சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா என்ற 5 வயது இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் பள்ளி விடுமுறை நாட்களில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் இருக்கும் தன்னுடைய தந்தை வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது . அதன்படி, கடந்த 27 ஜூன் 2026 அன்று இரவு சுமார் 11 மணியளவில் மதுரையில் இருந்து 2 குழந்தைகளையும் தனது தந்தை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் கார்த்திகைச்செல்வி.இரவில் கார்த்திகைச்செல்வி, இரட்டை குழந்தைகள் மற்றும் கார்த்திகைச்செல்வியின் அப்பா, அம்மா ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் அதிகாலை 3 மணியளவில் புழுக்கமாக இருந்ததால், வீட்டின் மெயின் கதவைத் திறந்து வைத்தப்படி தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் அனைவரும் உறங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று (28.06.2026) அதிகாலை சுமார் 03.30 மணியளவில் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சாய் தீப்தி காணாமல் போனது தெரியவந்தது.இதையடுத்து, உறவினர்கள் அதிகாலை முதலே அக்கம்பக்கம், உறவினர்கள் வீடு, அருகில் உள்ள குளம் போன்ற பல இடங்களில் தீவிரமாக தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், உடனே இதுகுறித்து கார்த்திகைச்செல்வி பஜார் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அப்பகுதியில் தீவிரமாக தேடிவந்தனர்.அப்போதுஅருகில் இருந்த பால்பாண்டி என்பவரின் வீட்டு அருகே இருந்த கிணற்றை ஆய்வு செய்தபோது, கிணற்று தண்ணீரில் சிறுமி சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறுமியின் உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ நடந்த இடத்தில் போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டனர்.மேலும், சிறுமி தானாக தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாராவது சிறுமியை கடத்திச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், சந்தேகத்தின் பேரில் நெருங்கிய உறவினர் ஒருவர் மற்றும் அருகில் வசித்த இளைஞர்கள் 2 பேர் என மூன்று பேரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, உறவுமுறை பெண் தான் சிறுமியை கிணற்றில் போட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த பெண் சிறுமியை எதற்காக கொலை செய்தார் என்பதற்கான தகவல் இன்னும் வெளிவரவில்லை. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை மர்மமான முறையில் கடத்தி கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

