அயர்லாந்து சென்ற இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில், முதல் போட்டியில், அயர்லாந்து அணி 182 ரன்களை அடித்து, 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில், அயர்லாந்து அணி, 154 ரன்களை மட்டும் அடித்து, இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது.இரண்டாவது போட்டியில், முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியில், ஒன்டவுன் பேட்டர் ஹேரி டெக்டர் 53 (47), பெஞ்சமின் 37 (23) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். மற்ற பேட்டர்கள் யாரும் 20+ ரன்களை தொடவில்லை. இறுதியில், அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 154/8 ரன்களை மட்டுமே எடுத்தது.அறிமுக பௌலர் பிரின்ஸ் யாதவ், 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்களில் 35 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், ஷிவம் துபே, 3 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் எடுத்தனர்.இந்திய இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், ஓபனர்கள் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் கோல்டன் டக் ஆகி, வரலாற்றில் மோசமான துவக்கத்தை கொடுத்தனர்.பிறகு, இஷான் கிஷன் 12 (11), கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 (7) ஆகியோரும் சொதப்ப, பிறகு திலக் வர்மா மிகவும் நிதானமாக விளையாடி, 46 பந்துகளில் 55 ரன்களை மட்டுமே அடித்தார். பிறகு, இறுதிக் கடத்தில், ஷிவம் துபே 20 (16), அக்சர் படேல் 14 (18), ஹர்ஷித் ராணா 21 (10) ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். இறுதியில், இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 153/9 ரன்களை மட்டும் எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது.இப்போட்டியில், இந்திய அணியின் தோல்விக்கான மூன்று முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.1. ஓபனர்கள் சொதப்பல்: இந்திய அணியை பந்துவீச்சில் எந்த குறையும் சொல்ல முடியாது. 154 ரன்களில் சுருட்டிவிட்டனர். அடுத்து, இந்திய ஓபனர்கள் நிதான துவக்கத்தை கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை. இருவரும் கோல்டன் டக் ஆகி ஷாக் கொடுத்தனர். இதுதான், தோல்விக்கு முக்கிய காரணம். இருவரில், ஒருவர் 20 பந்துகள் வரை எதிர்கொண்டிருந்தாலே, இந்திய அணி சுலபமாக வென்றிருக்கும்.2. ரன்அவுட்: முதல் இரண்டு விக்கெட்கள் விழுந்தப் பிறகு, இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் நிதானமான விளையாடி, பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அந்த நேரத்தில், இஷான் கிஷன் 11 பந்தில் 12 ரன்களை எடுத்திருந்தபோது, எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இந்த ரன்அவுட்டும் ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.3. பவர் ஹிட்டர்கள் இல்லை: பினிஷர்கள் இடங்களில் பவர் ஹிட்டர்கள் இல்லாததும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. திலக் வர்மா, சமீப காலமாகவே மூன்று பார்மெட்களிலும் டெஸ்ட் ஆடி வருகிறார். அவருக்கு பினிஷர் இடத்தை கொடுத்துள்ளனர். மேலும், அக்சர் டேல், ஷிவம் துபே ஆகியோரும் சமீப காலமாகவே நல்ல பார்மில் இல்லை. ராஜத் படிதர், க்ருணால் பாண்டியா போன்றவர்களை புறக்கணித்து, மோசமான அணித் தேர்வும் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.கடைசி ஓவர். கடைசி 6 பந்தில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஹேரி டெக்டர் வீசிய ஓவரில், முதல் பந்து ஒயிடாக சென்ற நிலையில், அடுத்த பந்தில், அர்ஷ்தீப் சிங் சிங்கில் அடிப்பார். பிறகு, 2ஆவது பந்தை ஹர்ஷித் ராணா எதிர்கொண்டபோது, டெக்டர் நோபாலாக வீச, 2 ரன்கள் ஓடினார்கள். அடுத்து, பிரி ஹிட்டில் பவுண்டரி சென்றது.அடுத்து, மூன்றாவது பந்தில் ஒரு ரன், நான்காவது பந்து ஒயிடாக சென்ற நிலையில், 4ஆவது பந்தில் அர்ஷ்தீப் சிங் ஒரு ரன் அடித்தார். இறுதியில், கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ராணா கேட்ச் ஆகி அவுட் ஆனார். அடுத்து, கடைசி பந்தில் பிரின்ஸ் யாதவ் சிக்ஸர் அடித்தார். இறுதியில், அயர்லாந்து அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.

