52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்: MMC வெளியிட்ட புதிய டெண்டர்- இனிமே குப்பையே இருக்காது

கோயம்பேடு மார்க்கெட் என்றாலே காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றின் விற்பனை தான் நினைவிற்கு வரும். நாள்தோறும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை விற்பனை களைகட்டும். பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த சூழலில் மார்க்கெட் தூய்மையான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் வீணாகும் காய்கறிகள், பழங்களை அப்படியே ஓரமாக கொட்டி விட்டு செல்லும் வழக்கம் தொடர்கிறது. இதுதவிர லாரிகளில் இருந்து மூட்டைகளை ஏற்றி, இறக்கும் போதும் காய்கறிகள் சிதறுகின்றன. இதுவும் குப்பைகளாக தேங்கும் நிலை காணப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட் தூய்மை பணிகள்

அதுமட்டுமின்றி மார்க்கெட்டின் உட்புற சாலைகள் தரமானதாக இல்லை. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படும் சூழல் நிலவுகிறது. இவற்றை எல்லாம் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு MMC எனப்படும் மார்க்கெட் மேலாண்மை குழுவிடம் உள்ளது. இவர்கள் தான் மார்க்கெட்டை நிர்வகித்து வருகின்றனர். இந்த சூழலில் மார்க்கெட்டில் இருந்து குப்பைகள், வீணாகும் காய்கறிகள், பழங்களை சேகரித்து எடுத்து செல்லும் பணிக்காக ஓராண்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

MMC வெளியிட்ட புதிய டெண்டர்

பூக்கள், , பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் குப்பைகள் மார்க்கெட்டில் எந்த ஒரு பகுதியில் இருந்தாலும் முறையாக சேகரித்து எடுத்து செல்ல வேண்டும். பொதுவான பகுதிகள், சந்தை தெருக்கள், டிரக்குகள் நிறுத்துமிடங்கள், உட்புற சாலைகள் ஆகிய பகுதிகளில் இருந்து குப்பைகளை சேகரித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும். புதிதாக டெண்டர் பெறும் ஒப்பந்ததாரரின் செயல்பாடுகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். இதில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகள் அகற்றம் - ஒப்பந்ததாரருக்கு கட்டுப்பாடுகள்

ஒருவேளை திருப்தி ஏற்படவில்லை எனில், உடனடியாக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். இதற்காக 60 சதவீதம் என்ற அளவீட்டை வைத்திருக்கின்றனர். செயல்பாடுகள் 60 சதவீத்ததிற்கும் கீழ் குறையும் போது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு வைப்புத் தொகை திருப்பி தரப்படாது. நிலுவையில் இருக்கும் தொகையும் திருப்பி தரப்படாது என்று அதிரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. MMC மூலம் விடப்படும் டெண்டர் பெறும் தனியார் நிறுவனத்திற்கு மாதந்தோறும் தொகை விடுவிக்கப்படும். இது பயன்படுத்தப்படும் வாகனங்கள், ஊழியர்கள், தண்ணீரின் அளவு, குப்பைகளின் அளவு உள்ளிட்டவற்றை பொறுத்து முடிவு செய்யப்படும். இதில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

கோயம்பேட்டில் குப்பைகள் அகற்றமும், பராமரிப்பும்

  1. ஒன்று, நாள்தோறும் குப்பைகள் சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் ஒரு டன்னிற்கு நாள்தோறும் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். குப்பைகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் மீது மருந்துகள் தெளித்து சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
  2. இரண்டாவது, குப்பைகளை சரியான இடத்திற்கு கொண்டு சென்று அப்புறப்படுத்த வேண்டும். ஒருவேளை வேறு எங்காவது கொட்டி விட்டு சென்றால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் இதே தவறை செய்யும் போது அபராதம் 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். இந்த விஷயத்தில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் இருந்து புகார்கள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, உபகரணங்கள்

உரிய சீருடை வழங்க வேண்டும். அவர்கள் பயன்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களையும் அளிக்க வேண்டும். ஒருவேளை ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களையும் கணக்கில் எடுத்து கொண்டு அபராதம் வசூலிக்கப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு ஊழியருக்கு 100 ரூபாய். அடுத்தடுத்து தவறுகள் நேர்ந்தால் 500 ரூபாயாக அபராதம் அதிகரிக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தூய்மையாக பராமரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *