அமெரிக்கா - ஈரான் தீவிரத் தாக்குதல்:
வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் படைகளுக்கு இடையே கடந்த இரண்டு நாட்களாகப் பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் கொடூரத் தாக்குதல்கள் நடந்து வரும் சூழலில் இந்த இறுதிச்சடங்கு நடந்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் நகரங்களை இணைக்கும் ரயில்வே பாதையை இலக்கு வைத்து அமெரிக்கா ஒரு தாக்குதலை நடத்தியதாக அரசு ஊடகம் கூறியுள்ளது.இதற்குப் பதிலடியாக குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மற்றொரு அமெரிக்க நட்பு நாடான ஜோர்டானில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஈரானில் இருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளைத் தடுத்து அழித்துள்ளதாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய போரின் முதல் நாளிலேயே, கமேனி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு மொஜ்தபா கமேனி எங்கே?
தொடர்ந்து ஆறு நாட்கள் நீடித்த மாரத்தான் இறுதிச் சடங்குகளின் இறுதி நாளான நேற்று, மஷ்ஹாத்தில் நடந்த அடக்கத்தின் போது மொஜ்தபா கமேனி வருவாரா என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஏனெனில் அடுத்த உச்ச தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து அவர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை எனக்கூறப்படுகிறது. நாடாளுமன்ற சபாநாயகரும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் தலைமைப் பிரதிநிதியுமான முகமது பாகர் காலிபாஃப், சக்திவாய்ந்த தலைமை நீதிபதி கோலம்ஹொசைன் மொஹ்சேனி எஜேய்மற்றும் கமேனியின் மூத்த மகன் முஸ்தபா கமேனி ஆகியோர் மட்டுமே நினைவிடத்தில் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். ஆனால், இறுதிச்சடங்கின் மற்ற நாட்களைப் போலவே நேற்றும் மொஜ்தபா கமேனி வரவில்லை. அவர் பொறுப்பேற்றதில் இருந்து வெறும் எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டு வருகிறார். கடந்த பிப்ரவரி 28 தாக்குதலில் அவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.கருப்பு உடை அணிந்து மஷ்ஹாத் நகரில் திரண்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கமேனி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
டொனால்ட் ட்ரம்பிற்கு ஆபத்தா?
இதற்கிடையில், ட்ரம்பைக் கொல்வதற்கான ஈரானின் புதிய சதித்திட்டத்தை தங்களது உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் தரப்பு அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த வியாழக்கிழமை, ஈரானின் ஒரே ஒரு சிவிலியன் அணுமின் நிலையத்தின் வெளிப்பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக புஷெர்மாகாணத்தின் துணை ஆளுநரை மேற்கோள் காட்டி ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. புஷெர் நகரின் புறநகரில் உள்ள ராணுவத் தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தற்போது ஈரானில் தங்கள் ராணுவம் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று மறுத்துள்ளார்.ஈரான் ராணுவம் தனது பங்கிற்கு, குவைத்தில் உள்ள பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு, கத்தாரில் உள்ள ஆரம்பக்கட்ட எச்சரிக்கை அமைப்பு மற்றும் பஹ்ரைனில் உள்ள எரிபொருள் தொட்டிகளை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாகக் கூறியுள்ளது. இருப்பினும், ஈரான் ஏவிய டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தடுத்து அழிக்கப்பட்டதாகவும், அமெரிக்கப் படையினருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

