திருத்தம் செய்யும் வசதி ஏன் அறிமுகப்படுத்தப்படுகிறது?
ஆதார் மற்றும் மொபைல் எண் விவரங்கள் பொருந்தாத காரணத்தினாலேயே ஏராளமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்திற்கு முழுத் தகுதி இருந்தும் ஆரம்பக்கட்ட ஆய்வின்போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகப் பலரிடமிருந்து அரசுக்குக் புகார்கள் வந்துள்ளன. அரசு தரப்பு தரவுகளின்படி, இத்திட்டத்தின் கீழ் 1.6 கோடிப் பேர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்களில் 1.2 கோடி விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் 27.8 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நிராகரிப்புக்கான காரணம் என்ன?
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் பெரும்பாலானவற்றில் பெரிய அளவிலான குறைபாடுகள் ஏதுமில்லை. தொழில்நுட்பம் அல்லது தரவு தொடர்பான சிக்கல்களாலேயே அவை தேக்கமடைந்தன என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரின் ஆதார் எண் அவர்களின் தற்போதைய மொபைல் எண்ணுடன் இணைக்கப்படாததே மிகவும் பொதுவான சிக்கலாக இருந்தது. மேலும், சிலர் வெவ்வேறு அரசுத் திட்டங்களுக்கு வெவ்வேறு மொபைல் எண்களை வழங்கியிருந்தனர். பல சந்தர்ப்பங்களில், ஒரே மொபைல் எண்ணைப் பயன்படுத்திப் பலர் பதிவு செய்திருந்தனர். இது சரிபார்ப்பில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி இறுதியில் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
திருத்தம் செய்யும் வசதி!
இந்தத் திருத்த வசதி இணையதளத்தில் செயல்பாட்டிற்கு வந்ததும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது பரிசீலனையில் உள்ளவர்கள் எளிதாக இணையதளத்தில் உள்நுழைய முடியும். அதன் பிறகு, அவர்கள் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்துகொள்ளலாம். தவறான விவரங்களைச் சரிசெய்யலாம். சரிபார்ப்புக்காக விண்ணப்பத்தை மீண்டும் சமர்ப்பிக்கலாம். இந்த வசதி புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை நீக்குவதோடு, சிறிய பிழைகள் காரணமாகத் தகுதியுள்ள விண்ணப்பதாரர் எவரும் பலன்களைப் பெறுவதிலிருந்து தடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பரிசீலனையை முடிக்க அரசு ஜூலை 10ஆ தேதியை இலக்காக நிர்ணயித்திருந்தது. மேலும், திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவுறுத்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தும் இணையதளத்தில் பலருடைய விண்ணப்பத்தின் நிலை இன்னும் "விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது" (Application Under Process) என்றே காட்டப்படுவதாக சில பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகும் தங்கள் விண்ணப்பங்கள் குறித்த தெளிவான பதிலுக்காகக் காத்திருக்கும் பல விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.ஆவணங்கள் அல்லது சரிபார்ப்பில் ஏற்படும் சிறிய பிழைகள் காரணமாகத் தகுதியுள்ள விண்ணப்பதாரர் எவரும் இத்திட்டத்திலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதிகாரிகள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்து வருகின்றனர். அடுத்து வரும் வாரங்களில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் உரிமைகளைப் பெறும் வகையில் அரசு ஒரு தீர்வை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

