என்ன நடந்தது? நாகர்கோவில் மாற்றுத்திறனாளி மரணப் பின்னணி
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா விற்பனை செய்ததாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மரணமடைந்துள்ளார்.அவர் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், அதனை ஏற்க சபரிவர்மனின் குடும்பத்தார் மறுத்துவிட்டனர்.
அடித்தே கொலை செய்துள்ளனர்- உறவினர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு
மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் கடுமையான காயங்கள் இருந்ததாகக் கூறும் அவரது குடும்பத்தினர், அவரை மாற்றுத்திறனாளி என்று கூடப் பாராமல் காவல்துறையினர் அடித்துக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்கு முறையான நீதி வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள்
முதல்வர் பதில் சொல்வாரா?காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதலமைச்சர், இந்த அப்பாவி மாற்றுத்திறனாளி இளைஞரின் மரணத்திற்கு உடனடியாக உரிய பதில் சொல்ல வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சாமானியருக்கு ஒரு சட்டமா? த.வெ.க-வுக்கு ஒரு சட்டமா?
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார். ஆனால், இதே குட்கா விற்பனை வழக்கில் ஈரோட்டில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) நிர்வாகி அருண் என்பவரை, கைது செய்த அன்றே காவல்துறை சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளது எப்படி என்ற அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.
இரட்டை நிலைப்பாடு ஏன்? முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
ஏழைச் சாமானியன் என்றால் ஒரு சட்டம், ஆளுங்கட்சியான த.வெ.க-வின் நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என காவல்துறை பாரபட்சமாக நடந்துகொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றும் காரணமான காவலர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான தக்க நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். சபரிவர்மனின் மரணத்திற்குத் தகுந்த தண்டனையை நீதிமன்றம் மூலம் இந்த அரசு பெற்றுத்தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

