சண்டிகரில் பெண் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் கடத்தப்பட்டு உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண் மன்ஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த இவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட மன்ஜீத்தின் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, அவர் சண்டிகரில் உள்ள செக்டர் 34 பகுதிக்கு தனக்கு அறிமுகமான ஒரு பெண்ணைச் சந்திப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இரு நபர்கள் மன்ஜீத்தை கோரமான முறையில் தாக்கி, பலவந்தமாக ஒரு காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, அவரை மொரிண்டா என்ற பகுதிக்குக் கொண்டு சென்ற அந்த மர்ம நபர்கள், கொடூரமான முறையில் உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.