தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கல் உருவாகுமா? வாழைத்தண்டு சாறு உண்மையிலேயே கரைக்குமா? – மருத்துவர்களின் விளக்கம்!

நமது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுப் பொருட்களை சிறுநீர் மூலமாக வடிகட்டி வெளியேற்றுவது சிறுநீரகங்களின் மிக முக்கியமான பணியாகும். சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் சிறுநீர், சிறுநீர்க் குழாய் வழியாகச் சென்று சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டுப் பின்னர் வெளியேறுகிறது. ஆனால், போதுமான அளவு தண்ணீர் குடிக்காத நிலை மற்றும் தவறான உணவுக் பழக்கவழக்கங்கள் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் ஏற்படுகிறது.

இந்நிலையில், தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் என்றும், வாழைத்தண்டு சாறு குடித்தால் அந்த நச்சுக்கற்கள் முற்றிலும் கரைந்துவிடும் என்றும் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் பரவி வருகின்றன. தக்காளி விதைகளில் ஆக்சலேட் (Oxalate) இருந்தாலும், அதனை அளவோடு சாப்பிடும் போது எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

அதேபோல், வாழைத்தண்டு சாறு சிறுநீர் பெருக்கியாகச் செயல்பட்டு சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்த உதவுமே தவிர, பெரிய அளவிலான கற்களை நேரடியாகக் கரைத்துவிடாது. எனவே, தேவையற்ற பயத்தைத் தவிர்த்து, தினமும் போதுமான அளவு நீர் அருந்துவதும், முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவதுமே சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top