ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இஸ்ரேல் நோக்கிப் பறந்து கொண்டிருந்த ‘ஃப்ளைதுபை’ பயணிகள் விமானத்தில் நடுவானில் நடந்த திடுக்கிடும் கடத்தல் முயற்சி குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தைக் கடத்த முயன்ற துணை விமானி, இந்தியாவைச் சேர்ந்த முதன்மை கேப்டன் ஸ்மித் மச்சார் மீது அவசர கால கோடாரியால் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, துணை விமானி திடீரென அவசர கால கோடாரியைக் கொண்டு கேப்டன் ஸ்மித் மீது தாக்குதல் நடத்தினார். இதனால் பலத்த காயமடைந்த நிலையிலும், சற்றும் பதற்றமடையாமல் மனவுறுதியுடன் செயல்பட்ட இந்திய கேப்டன், காக்பிட் கதவைத் திறந்து சக ஊழியர்களின் உதவியை நாடினார். உடனடியாகச் செயல்பட்ட விமானப் பணியாளர்கள், தாக்குதல் நடத்திய துணை விமானியைச் சமயோசிதமாக மடக்கிப் பிடித்தனர்.
இந்திய கேப்டனின் இந்த வீர தீரச் செயலால் விமானமும், அதில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர்களும் அசம்பாவிதமின்றி காப்பாற்றப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழக்கறிஞர், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.