இஸ்ரேல் நோக்கிப் பயணித்த ஃப்ளைதுபை (Flydubai) விமானத்தைக் கடத்த முயன்ற துணை விமானி, இந்தியாவைச் சேர்ந்த முதன்மை விமானி ஸ்மித் மச்சார் மீது கோடாரியால் கொடூரத் தாக்குதல் நடத்திய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் இச்சம்பவம் குறித்த புதிய விவரங்களை நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை விமானி தீவிர முயற்சி செய்துள்ளார். அப்போது காக்பிட்டில் அவசரகால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கோடாரியை எடுத்து, கேப்டன் ஸ்மித் மச்சார் மீது அவர் திடீரெனத் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காயமடைந்தபோதிலும், இந்திய கேப்டன் மனவுறுதியுடன் போராடி காக்பிட் கதவைச் சமயோசிதமாகத் திறந்துள்ளார்.
காக்பிட் கதவு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சக விமான ஊழியர்கள் மற்றும் பயணிகளின் உதவியோடு தாக்குதல் நடத்திய துணை விமானி உடனடியாக மடக்கிப் பிடிக்கப்பட்டார். இந்திய கேப்டனின் துணிச்சலான செயலாலும் சாதுரியத்தாலும் பெரும் விமான விபத்தும் கடத்தல் சம்பவமும் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், பல உயிர்களைக் காப்பாற்றிய இந்திய கேப்டனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.