நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் நிபுணர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஷமி, தற்போது முழு உடற்தகுதியைப் பெற்று ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் அபாரமாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். இருப்பினும், அவரை இந்திய அணியில் சேர்க்காமல் தேர்வுக்குழு புறக்கணித்துள்ளது.
இளம் வீரர்களுக்கு உடனடியாக வாய்ப்பளிக்கும் தேர்வுக்குழு, சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாகச் சாதித்த அனுபவ வீரர் ஷமியைப் புறக்கணிப்பது ஏன் என்று விளையாட்டு விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ‘புவிக்கு ஒரு நியாயம், ஷமிக்கு ஒரு நியாயமா?’ என்று தேர்வுக்குழுவின் இரட்டை நிலையைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வரவிருக்கும் முக்கியத் தொடர்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதா அல்லது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பிசிசிஐ இதுவரை எவ்விதத் தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை.