இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான யூசுப் பதானுக்கு குஜராத்தின் வதோதரா மாநகராட்சி நிலைக்குழு நிலம் ஒதுக்கீடு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வதோதராவில் உள்ள சுமார் ரூ.20.53 கோடி மதிப்பிலான நிலத்தில், 500 சதுர மீட்டரை யூசுப் பதானுக்கு இலவசமாகவும், மீதமுள்ள 478 சதுர மீட்டரை 45 சதவீத தள்ளுபடியிலும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு, தனது குடியிருப்புக்கு அருகில் உள்ள இந்த மாநகராட்சி நிலத்தை தனக்கு விற்பனை செய்யுமாறு யூசுப் பதான் கோரியிருந்தார். அப்போது மாநகராட்சி சபை ஒப்புதல் அளித்த போதிலும், மாநில அரசு அதை நிராகரித்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த முன்மொழிவுக்கு நிலைக்குழு திடீரென ஒப்புதல் அளித்திருப்பது புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
பொதுமக்களின் சொத்தான அரசு நிலத்தை, ஒரு தனிநபருக்கு இவ்வளவு தாராளமாக வழங்குவது சட்டவிரோதமானது என காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதால், குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.