அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பொதுக்கூட்டங்கள் மற்றும் முக்கியச் செய்தியாளர் சந்திப்புகளில் என்ன பேசுவார் என்ற ரகசிய உள்தகவல்களைப் பயன்படுத்தி, பங்குச்சந்தையில் முறைகேடாகப் பணம் சம்பாதித்த வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியருக்கு 1.72 லட்சம் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.1.64 கோடி) அதிகமான தொகையை அபராதமாகச் செலுத்த அமெரிக்க நிதிச் சந்தை ஒழுங்குமுறை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் அவரது டெலிப்ராம்ப்டர் (Teleprompter) இயக்குநராகப் பணியாற்றிய நபர், டிரம்பின் உரைகளில் இடம்பெறவிருக்கும் முக்கிய அறிவிப்புகள், கொள்கை முடிவுகள் மற்றும் குறிப்பிட்ட நிறுவனங்கள் சார்ந்த கருத்துகளை முன்னரே அறிந்து கொண்டுள்ளார். இந்த ரகசியத் தகவல்களைப் பயன்படுத்திப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு அவர் பெருமளவில் லாபம் ஈட்டியது அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நிதிச்சந்தை விதிமுறைகளை மீறி, அதிபரின் அதிகாரப்பூர்வ உரையைத் தன் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திப் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட இச்சம்பவம், அமெரிக்க அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.