
தவெக ஆட்சி அமைய தடுக்க சதி?
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்துள்ள நிலையில், தவெக பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
திமுக - அதிமுக ரகசியக் கூட்டணி?
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தவெக அரசுக்கு எதிராகப் பின்னப்பட்ட ரகசிய வலைகளைப் பற்றிப் பகிரங்கமாக உடைத்தார். சட்டமன்றத் தேர்தலில் தவெக பெரும்பான்மை பெற்ற நிலையில், திமுகவும் - அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து சதித்திட்டம் தீட்டியது யார் என ஸ்டாலின் கூற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தமிழக வரலாற்றில் அதிமுகவோடு திமுக இணைந்து ஒரு ஆட்சியை பிடிக்கலாம் என்று சதிவலை பின்னியதே இதுவே முதல்முறை என்று சாடிய அவர், திராவிடக் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் பல தசாப்த கால அரசியல் பகையை மறந்து, தவெக-வின் எழுச்சியைத் தடுக்கவும் கூட்டு ஆட்சி அமைக்கவும் திரைக்குப் பின்னால் காய் நகர்த்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சதிவலையை முறியடித்த முதலமைச்சர் விஜய்
தவெக மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அண்மைக்காலமாக விமர்சனம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் கடுமையாகச் சாடினார். நடப்புத் தேர்தலில் மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவருக்கு, மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக அரசை விமர்சிக்க எவ்வித தகுதியும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். திராவிடக் கட்சிகளின் இந்த ரகசியக் கூட்டுச் சதியை, தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் தனது சாணக்கியத்தனமான அரசியல் வியூகங்களால் முற்றிலும் முறியடித்துள்ளார் என்று செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தவெக ஆள் பிடிக்கும் கட்சி அல்ல அமைச்சர் விளக்கம்
மாற்றுக் கட்சியினர் தவெக-வில் இணைந்து வருவது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், தவெக எந்தவொரு கட்சியிலிருந்தும் தலைவர்களையோ தொண்டர்களையோ வற்புறுத்தி ஆள் பிடிக்கும் குதிரை பேர வேலைகளில் ஈடுபடவில்லை என்று தெளிவுபடுத்தினார். கடந்த திமுக ஆட்சியில் ஏற்பட்ட கடுமையான அதிருப்தி காரணமாகவே, மாற்றுக்கட்சியினர் தற்பொழுது தமிழகத்தின் நல்வாழ்வு வேண்டி தவெக-வை நோக்கித் தாங்களாகவே தேடி வருகிறார்கள் என்றும் அவர் விளக்கமளித்தார். அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையனின் இந்த பேச்சு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முகாம்களிலும் தற்பொழுது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
