
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கரூர் எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சத்யா, மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அரசு நிர்வாகம் சார்ந்த இந்த ஆலோசனைக் கூட்டம் சுமுகமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கூட்டரங்கை விட்டு வெளியே வந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜயபாஸ்கர்
இந்த நிலையில், தன் மீதான கட்சி மாற்ற வதந்திகளுக்கு அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று (ஜூன் 15, 2026) கரூரில் அதிகாரப்பூர்வமாக நேரடி மறுப்புத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முற்றிலும் தவறான செய்தி- மௌனம் கலைத்த முன்னாள் அமைச்சர்
செய்தியாளர்கள் அவரிடம், நீங்களும், அதிமுக புதுக்கோட்டை முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையா? ஜூன் 22-ல் அதிரடி திருப்பம் ஏதும் நிகழுமா? என நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.இந்தக் கேள்விக்கு எந்தவிதத் தயக்கமும் இன்றி சிரித்துக்கொண்டே பதிலளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், அத்தகைய தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. அது முற்றிலும் தவறான செய்தி. ஒரு சில ஊடகங்கள் மட்டுமே இதுபோன்ற எந்தவொரு ஆதாரமும் இல்லாத வதந்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றன எனத் தெளிவாக விளக்கமளித்தார்.இதன் மூலம், கடந்த சில தினங்களாகத் தன்னைச் சுற்றிப் பரப்பப்பட்டு வந்த அரசியல் வதந்திகளுக்கு அவர் மிக லாவகமாக எண்ட் கார்டு வைத்துள்ளார்.
கரூர் டூ புதுக்கோட்டை
எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த அதிரடி மறுப்பு கரூர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக விளங்கும் அவர் கட்சி மாறினால் அது கரூர் மாவட்ட அதிமுகவிற்குப் பெருத்த அடியாகக் கருதப்பட்டது.இருப்பினும், கரூரில் வதந்திகள் அடங்கியுள்ள போதிலும், புதுக்கோட்டையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிமுக தலைமைக்கு எதிராகப் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால், புதுக்கோட்டை மண்டல அரசியல் நகர்வு இன்னும் சஸ்பென்ஸாகவே நீடிக்கிறது.
