
இந்திய ஏ அணி, இலங்கை அணிக்கு 266 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்த நிலையில், இலங்கை அணியும் 265 ரன்களை எடுத்ததால், ஆட்டம் டிரா ஆனது.இதனைத் தொடர்ந்து, சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 6 பந்தில் 16 ரன்களை குவித்த நிலையில், 17 ரன்கள் இலக்கை துரத்தி இந்திய ஏ அணி பேட்டர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஸ் செட்ஜ் ஆகியோர் களமிறங்கினார்கள். இருவரும் நல்ல பார்மில் இருப்பதால், இந்திய ஏ அணி எளிதில் வென்றுவிடும் எனக் கருதப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்திய ஏ அணி 9 ரன்களை மட்டும் சேர்த்து தோல்வியை சந்தித்தது.இதனைத் தொடர்ந்து, இலங்கை ஏ அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வைபவ் சூர்யவன்ஷியை பார்த்து, இலங்கை வீரர்கள் சிலர் ஏதோ பேச, உடனே கோபத்தின் உச்சிக்கே சென்ற வைபவ் சூர்யவன்ஷி அடிக்க பாய்ந்தார். இதனை சற்றும் எதர்பாராத இலங்கை ஏ அணி வீரர்கள் சிலர், சூர்யவன்ஷியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.இருப்பினும், சூர்யவன்ஷி பெவிலியன் திரும்புவரை, திட்டிக் கொண்டேதான் சென்றார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில், வெளிச்சம் குறைவாக இருந்ததால்தான், இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதனால்தான், சூர்யவன்ஷி அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய ஏ அணி இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணியில் சூர்யான்ஸ் செட்ஜ் அபாரமாக செயல்பட்டார். மொத்தம், 66 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 72 ரன்களை குவித்தார். விப்ராஜ் நிகமும் 49 பந்தில் 6 பவுண்டரி உட்பட 51 ரன்களை சேர்த்தார். மேலும், ருதுராஜ் கெய்க்வாட் 37 (42), கேப்டன் திலக் வர்மா 23 (32) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை அடித்ததால், இந்திய அணி, 49.2 ஓவர்களில் 265/10 ரன்களை எடுத்தது. இலங்கை ஏ அணி பௌலர்கள் முகமது சிராஸ் 7.1 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் 10 ஓவர்களில் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினார்கள்.இலங்கை ஏ அணி இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை ஏ அணியில், சமரவிக்ரமா 113 பந்துகளில் 7 பவுண்டரி உட்பட 93 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், டிக்வெல்லா 37 (33), அவிக்ஷா பெர்ணான்டோ 22 (14), வனுஜா ஷகான் 25 (41) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை அடித்தார்கள்.இறுதியில், கடைசி ஓவருக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, அர்ஷாத் சிறப்பாக பந்துவீசி 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். குறிப்பாக, கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது, ஒரு ரன்னை மட்டும் எடுக்கவிட்டு, ரன்அவுட் செய்தனர். இதனால்தான், இலங்கை ஏ அணி, இப்போட்டியை டிரா மட்டும் செய்தது. இந்திய ஏ அணியில், ஆயுஷ் படோனி 9 ஓவர்களில் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.
