முதல்வர் விஜய்யின் கரூர் பேச்சு
ஆனால் பேச ஆரம்பித்தால் வெளியே சென்று விடுகிறார்கள் பார்த்திபன் என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடி விடுகிறார்கள் ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள் என்று விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.இந்த நிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவை விமர்சனம் செய்ததற்கு முதல்வர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றதொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை நம்மைவிட அதிகமாகப் புகழ்ந்து பாடியவர்கள் தான் இன்று சுயநலத்திற்காக அதிமுகவிலிருந்து வெளியேறியுள்ளனர். கட்சியை விட்டுச் சென்றவர்கள் அனைவரும் விரைவில் மண்ணைக் கவ்வப்போகிறார்கள். சாதாரணத் தொண்டன் கட்சி மாறினால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது.
திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஜேந்திர பாலாஜி
ஆனால், அதிமுகவை வைத்தே தங்களது சொத்துக்களையும் பொருளாதாரத்தையும் பெருக்கிக்கொண்ட சில முன்னாள் அமைச்சர்கள், இப்போது செய்துவிட்டு அங்கே சென்று வேஷம் போடுகிறார்கள். அவர்கள் மீண்டும் தாய்க் கழகத்திற்கே ஓடி வரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார்.முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் தவெகவில் இணைந்துள்ளதாகக் கூறுவதெல்லாம் வெறும் 'செட்டப் . அதிமுகவின் உண்மையான இரத்தத்தின் இரத்தங்கள் ஒருபோதும் கட்சி மாற மாட்டார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல சரித்திரச் சாதனைகளைப் படைக்க தவெகவிற்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்கள் இப்போது வேஷம் கட்டி ஆடுகிறார்கள், இந்த ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது.
150 இடங்களில் ஜெயித்திருக்க வேண்டியதுதானே?
விஜய் ஒரு மாஸ் நடிகர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தேர்தலின் போது அவர் அள்ளி வீசிய வாக்குறுதிகளை நம்பி ஏமாந்ததால் தான் கிராமப்புறங்களில் தவெகவுக்கு வாக்குகள் கிடைத்தன. ஆனால், இந்த வெற்றி நிலையானது அல்ல. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுக்கு மக்கள் சங்கு ஊதுவது உறுதி. தவெகவிற்கு அத்தனை பெரிய மக்கள் செல்வாக்கு இருந்தால் தனித்து நின்று 150 இடங்களில் ஜெயித்திருக்க வேண்டியதுதானே? வெறும் 108 தொகுதிகளில் மட்டும் வென்றுவிட்டு, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தயவோடுதான் ஆட்சியை அமைத்துள்ளார்கள். இந்த லட்சணத்தில் கரூரில் இவ்வளவு ஆட்டமா?சென்னை மேயராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த மு.க.ஸ்டாலினைப் பார்த்து 'கொத்து புரோட்டா போடுவோம்' என விஜய் பேசுவது எந்த வகையில் நியாயம்? அரசியல் ரீதியாக நானும் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளேன், எங்கள் தலைவர் இபிஎஸ் உத்தரவின் பேரில் பதிலடி கொடுத்துள்ளேன்.
மு.க.ஸ்டாலினுக்கு எந்த நிமிடம் கோபம் வருகிறதோ?
ஆனால், ஒருபோதும் அவரை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தியதில்லை. மத யானை போன்ற திமுகவையே அடக்கி ஆண்ட பாரம்பரியம் கொண்டவர்கள் நாங்கள், எங்களைப் பார்த்து 'தூர்ந்து போன சக்தி' என விஜய் கூறுவதா? மக்கள் முகத்தையே பார்க்காமல் வாக்களித்த ஒரே தேர்தல் இதுதான்.தவெக அரசின் ஆயுள் குறித்துப் பேசிய ராஜேந்திரபாலாஜி, "திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த நிமிடம் கோபம் வருகிறதோ, அன்றே தவெக ஆட்சியின் கதை முடிந்துவிடும். அவருக்குக் கோபம் வரும் வரைதான் இந்த ஆட்சி நீடிக்கும். தவெகவிற்கு வாக்களித்த மக்களே இப்போது யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். தவெக ஆட்சி அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். முதலமைச்சர் நாற்காலியில் இருப்பவர் தார்மீகப் பொறுப்போடு பேச வேண்டும். தவெக தலைவர் விஜய்யின் இந்த மிரட்டல் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை என்று கூறினார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக ராஜேந்திர பாலாஜி குரல் கொடுத்திருப்பது , அவர் திமுகவில் இணைய உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

